நகை, பணத்தை காட்டி வீடியோ வெளியிட்ட யூடியூபர் வீட்டில் கொள்ளை

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
காணொளிக் குறிப்பு, நகை பணத்தை காட்டி வீடியோ வெளியிட்ட யூடியூபர் வீட்டில் கொள்ளை.
நகை, பணத்தை காட்டி வீடியோ வெளியிட்ட யூடியூபர் வீட்டில் கொள்ளை
பிரசுரிக்கப்பட்டது

நாகர்கோவில் அருகே உள்ள தம்மத்துக்கோணம் பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார். இவர் ஃபைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி மதுமிதா, சமூக வலைதளப் பக்கங்களில் தீவிரமாக இயங்கி வருகிறார்.

தான் வாங்கும் புதிய தங்க நகைகள், கழுத்து நிறைய அணிகலன்கள் மற்றும் வீட்டில் மெத்தையில் அள்ளிப்போட்டு கட்டுக்கட்டாக இருக்கும் பணம் போன்றவற்றை அவர் பதிவிட்டு வந்துள்ளார்.

இந்தநிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு இவரது வீட்டில் சுமார் 110 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோயில் டிஎஸ்பி பிரகாஷ்: பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி

சமூக வலைதளத்தில் தன்னிடம் இருக்கும் சொத்து, நகை, பணத்தை அவர் காட்டும் காணொளிகள் உள்ளன. அந்தப் பெண்ணை பின்தொடரும் நபர்கள் அதிகளவில் உள்ளனர். இதுபோன்ற காணொளிகளால் அவருக்குத் தான் இழப்பு. குற்றத்தில் ஈடுபட்ட நபர்களைக் காவல்துறை கைது செய்வது என்பது இரண்டாவது விஷயம். ஆனால், நகைகளைப் பறிகொடுப்பதன் மூலம் அவர்கள் இழப்பை சந்திக்கிறார்கள்.

தன்னிடம் இருக்கும் நகை, பணம் போன்ற விவரங்களை வெளியிடுவது சரியானதல்ல. வினோத் குமார் மதுமிதா தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. அந்தக் குழந்தையை வைத்து அவர் காணொளியை வெளியிட்டுள்ளார்.

இதுபோன்று காணொளிகளை வெளியிட்டு பிரபலமாக நினைக்கின்றனர்.

வியாழக்கிழமை மாலை சுமார் 5 மணியளவில் துணிகளை வாங்குவதற்காக வீட்டை விட்டுக் கிளம்பியுள்ளனர். இரவு 11.30 மணிக்கு மேல் வந்துள்ளனர். வீட்டின் பின்புற வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், பங்களாவுக்குள் வந்த பிறகு முன்பக்க கதவைப் பூட்டிவிட்டார்.

இவர்கள் வந்தால் கூட கதவைத் திறக்க முடியாத அளவுக்கு பூட்டிவிட்டனர். கதவைத் திறக்க முயற்சித்தபோது முடியவில்லை. உள்ளே கதவு லாக் ஆகிவிட்டதாக நினைத்து தச்சர் ஒருவரை அழைத்துள்ளனர்.

அவர் பார்த்துவிட்டு உள்ளே கதவு பூட்டப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். பின்பக்கம் சென்று பார்த்தபோது கதவு திறக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

போதைப் பொருள், சிறார் வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வு காணொளிகளை வெளியிட்டால் மக்கள் மத்தியில் பரவலாக சென்று சேரும். விழிப்புணர்வை கொடுத்தது போலவும் இருக்கும். தன்னிடம் இருக்கும் பணத்தைக் கொட்டி காணொளியை வெளியிடுவதன் மூலம் மக்கள் வெறுப்படையும் சூழல் ஏற்படுகிறது.

வழக்கில் யார் வீட்டுக்குள் வந்தார்கள் என்பதை சிசிடிவி காட்சிகள் மூலம் ஆய்வு செய்து வருகிறோம். அது விஜபிக்கள் வசிக்கும் பகுதியாக உள்ளது. இரண்டு, மூன்று கோணங்களில் ஆய்வு நடத்தி வருகிறோம். இவர்கள் வீட்டில் உள்ள ஒரு சிசிடிவியை மட்டும் திருப்பி வைத்துள்ளனர்.

மூன்று கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. மிகப் பெரிய வீடாக உள்ளதால் குறைந்தது எட்டு கேமராக்கள் வைத்திருந்தால் தான் முழுமையான கண்காணிப்புக்கு வந்திருக்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு